இயற்கை வருணனை
இயற்கை வருணனை
ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், வரைக் காட்சிப்படலம். கார்காலப்படலம் எனப் பல படலங்களில் இயற்கைக் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஒரு சூழலை நீள நெடிய விளக்கும் போது இயற்கையைத் தக்க பின்னணியாகக் கம்பர் அமைத்துக் கொள்கிறார். இயற்கை வருணனையின் ஊடே சில நயமிக்க நாடகங்களையும் அமைத்து விடுகிறார்.) சூர்ப்பநகை மூக்கரிபடலத்தில் கோதாவரிக் காட்சி சீதையும் இராமனும் மனமகிழ்ந்திருக்கிற நிலையைச் சில பாடல்களால் உணர்த்துகிறது. இது சூர்ப்பநகை அறிமுகமாகும் காட்சிக்கு முன்னர் அமைகின்ற முரணான உணர்வுச் சூழலும் ஆகும்.
"ஒதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும் சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் மாதவள் தானும் ஆண்டு வந்துநீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்" என்ற பாடலில் ஒரு நளின நாடகம்- முறுவல் நாடகம் அரங்கேறுகிறது. நீர்நிலையில் ஒதுங்கி நீந்திச்சென்ற அன்னத்தைக் கண்ட இராமன் உன் நடையைக் கண்டுதான்அன்னம் வெட்கி ஒதுங்கிச் செல்கிறது என்ற பொருள்படச் சிரித்தான். சற்று நேரத்தில் ஒரு யானை வந்து நீருண்டு மீண்டு போகும் காட்சியைக் கண்ட சீதை, உன்நடையைக் கண்டு யானை புறமுதுகிட்டுத் திரும்பிச் செல்கிறது என்ற பொருள் படப் புதியதோர் முறுவல் பூத்தாள் என்பது பாடலின் பொருள். நுண்ணிதின் உணர்ந்து சுவைக்க வேண்டிய இத் தகைய பாடல்கள் பலவும் இராமகாதைக்கு இனிமை சேர்க்கின்றன.
Comments
Post a Comment